வனப்பகுதியில் செடிகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர்

தர்மபுரியில் பருவமழை பொய்த்த நிலையில், தர்மபுரி வனப்பகுதியில் நடவு செய்யப்பட்ட 86375 செடிகளை பாதுகாக்க நடவடிக்கை, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காடு, பாளையம் புதூர் காமராஜ் நகர் பகுதியில் வனத்துறை சார்பில் ஈட்டு நிலத்தோட்டம் திட்டத்தின் மூலம் சுமார் 12.75 ஹெக்டேர் பரப்பளவில் புங்கன், ஆயான், தேக்கு, வேம்பு, காட்டு நெல்லி, ஜம்பு நாவல், ஈட்டி, கொட்டை நாவல், இலுப்பை, அரசு, வில்வம், அத்தி, ஆல், நீர் மருது, விளா என 15 வகையான 6375 செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று நூலஅள்ளி- ரெட்டிஅள்ளி காப்புக்காட்டில் 100 ஹெக்டேர், ஏலகிரி காப்புக்காட்டில் 75 ஹெக்டேர், பரிகம் காப்புக்காட்டில் 250 ஹெக்டேர், பெரும்பாலை காப்புக்காட்டில் 175 ஹெக்டேர், தொப்பூர் காப்புக்காட்டில் 100 ஹெக்டேர் என மொத்தம் 700 ஹெக்டேர் பரப்பளவில் புங்கன், செம்மரம், தேக்கு, ஈட்டி, இலுப்பை, ஆயான், பரம்பை, வேம்பு, குடைவேல், காட்டு நெல்லி, ஜம்பு நாவல், கொட்டை நாவல், வேங்கை, வாகை, விளா, வில்வம், நீர் மருது, புளியன், மலைவேம்பு, ஆல், அரசு, அத்தி என 22 வகையான 70,000 செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏலகிரி காப்புக்காட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் 50 ஹெக்டேர் பரப்பளவில் செம்மரம் 10000 செடிகளும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செடிகள் நடவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பருவ மழை பொய்த்த நிலையில் வனத்துறை சார்பில் மண்டல வனப் பாதுகாவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோரது ஆலோசனையின் பேரில் தர்மபுரி வனச்சாரகர் அருண் பிரசாத் தலைமையில் வனத்துறையினர் கூலி ஆட்கள் மூலம் மாதத்துக்கு 5 முறை டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கோடை வெப்பத்தால் செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த செடிகளை பாதுகாக்க கூடுதல் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆடுகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து செடிகளை பாதுகாக்க பசுமை வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது.வனப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள செடிகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியானது தர்மபுரி மாவட்டத்திற்கு நல்ல மழை கிடைக்கும் வரை செடிகள் வாடாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story