கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்
கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி கூறினார்.
கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் -உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பிப்ரவரி 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் அன்று, சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 என ஆதார விலை நிர்ணயிக்க கோரியும், பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க கோரியும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு இதுவரை விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான ஆதார விலையை அறிவிக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. தேங்காய் விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, தென்னை விவசாயிகளை காக்கும் வகையில், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இந்த ஆண்டு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிப்காட் தொழிற்பேட்டை, 8 வழி சாலை திட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் போன்ற பணிகளுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய பங்கை கர்நாடகாவிடம் கேட்டுப்பெற்றுத்தர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி, வரும் பிப்ரவரி. 19ம் தேதி தமிழக சட்டசபை, பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், தமிழக விவசாயிகளை ஒன்றுதிரட்டி, சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.