சித்தா ஆரோக்கிய விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் நிதி நல்கையின் கீழ், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், சித்தா ஆராய்ச்சிகளுக்கான மத்திய கவுன்சிலும் இணைந்து நடத்தும் சித்தா ஆரோக்கிய பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் இரு சக்கர வாகன பேரணி மருத்துவ முகாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. 17 சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 22 பேர் பங்கேற்கும் இப்பேரணி தனது பயணத் திட்டத்தில், புது டெல்லியில் தொடங்கி கன்னியாகுமரி முடிய 3,333 கிலோமீட்டர் தூரத்தில், 8 மாநிலங்களில் 21 நகரங்களில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இப் பேரணியாக பிப்.8 வியாழக்கிழமை தஞ்சைக்கு வருகை தந்தது. இப்பேரணியை வரவேற்கும் விதமாக, தமிழ் பல்கலைக்கழகம் சித்த மருத்துவத் துறை பேராசிரியர்கள் மரு பெ.பாரத ஜோதி, ஜெ.அன்பு ஜெப சுனில்சன், மருத்துவர் து.மாண்டெலா, மரு பழ.பாலசுப்ரமணியன் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் கலந்து கொண்டு, சித்த மருத்துவப் பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பேரணி குழுவினரை வாழ்த்தி, சிறப்பு செய்தார். இதில், தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சி.தியாகராஜன், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பேராசிரியர் ரெ.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சித்த ஆராய்ச்சிகளுக்கான மத்திய கவுன்சிலுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பேரணி மற்றும் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்வி சாரா பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 550 பேருக்கு அமுக்கரா லேகியம், ஏலாதி சூரண மாத்திரை, தாளி சாதி வடகம், வலி நிவாரண களிம்பு, மூலிகை குளியல் சோப் அடங்கிய சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ் பல்கலைக்கழக மக்கள் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் சு.முருகன் வழி நடத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் சித்த மருத்துவத் துறை உதவி பேராசிரியர் மரு. முனைவர்.பழ. பாலசுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.