தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
மகாராஷ்டிராவில் நடந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு, ஊர்மக்கள் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆவது வகுப்பு பயின்று வரும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் என்ற இடத்தில் நடைபெற்ற 67 வது அகில இந்திய பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பரிபூரணம் தலைமையில் விளையாட்டுத்துறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் ஆசிரியர் பெருமக்கள் மேளதாளத்துடன் சந்தன மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து பூங்கொத்து கொடுத்து தூத்துக்குடியின் முக்கிய வீதி வழியாக அழைத்து வரவேற்று வந்து பள்ளியின் அசெம்பிளியில் பாராட்டு தெரிவித்தனர்.
"கடினம் உழைப்பும் விடாமுயற்சியும் கடின பயிற்சியும் மேற்கொண்டால் இது போன்ற வெற்றியை பிடிக்கலாம்" என விளையாட்டுத்துறை ஆய்வாளர் கண்ணதாசன் தனது வாழ்த்துறையின் போது தெரிவித்தார். மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், மாணவிகளும் பாராட்டு தெரிவித்தனர்.