ரமலான் நோன்பை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சென்னை AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரஷன்ஸ் சார்பாக புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயமணி தலைமையில் நடைபெற்றது.
சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார் முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார். ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சத்து மாவு, பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரஷன்ஸ் உரிமையாளர் அ.அப்துல் அஜீம் வழங்கினார்கள்.
மருத்துவ அலுவலர் ஜெயமணி பேசுகையில், காசநோயாளிகளுக்கு மருந்து மாத்திரை மட்டும் போதாது, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் தேவையான சத்தான உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டும். ஆகவே, இதனை கருத்தில் கொண்டு AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரஷன்ஸ் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து ஐந்தாவது வருடமாக ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது மனிதநேயமிக்க செயலாகும். அவர்களின் இச்செயலை மனதார பாராட்டுவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள் நன்றி கூறினார்.