உயிரிழந்த கட்டுமான தொழிலாளர் குடும்பத்தினருக்கு நல உதவி

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் நேற்று சேலம் கோரிமேட்டில் உள்ள, கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது பல்வேறு விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளதற்கான காரணம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நலவாரியத்தில் பதிவு செய்து உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், வீடு கட்டிக்கொள்ள ரூ.4 லட்சம் வாரியம் வழங்குகிறது. உறுப்பினர்களின் குழந்தைகள் உயர்கல்வி செலவுகளை வாரியம் ஏற்றுக்கொள்கிறது. கடந்த 2 ஆண்டில் 20 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். 50 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.கடந்த 2 மாதமாக மணல் எடுக்க அனுமதி இல்லை. இதனால் கட்டுமான தொழில் பாதித்து உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் வாரியம் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளது ஆறுதலான செய்தி. தமிழ்நாட்டில் நலவாரியம் சிறப்பாக செயல்படுகிது. வாரிய உறுப்பினர்கள் சான்றுகள் பெறுவதில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். கட்டுமான தொழில்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். மணல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
