நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை தஞ்சாவூர், ரீனாமித்ரா மஹாலில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 1,102 இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 62 பட்டா மாறுதல் ஆணைகளும், 7 வருவாய்த்துறை சான்றிதழ்களையும் வழங்கினர்.
தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.8,07,500 மதிப்பீட்டில் நிழல்வலை கூடாரம், பவர் டில்லர், சிப்பம் கட்டும் அறை, நிரந்தர பந்தல், குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு ஆகியன அமைப்பதற்கான மானியத்தை வழங்கினர். மாவட்ட வேளாண்துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-2024ன்கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.7,720 மதிப்பீட்டில் 2 பேட்டரி தெளிப்பான்களும், 4 தார்பாய்களும், சிங்க்சல்பேட் உரங்களும் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூ.4,20,000 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், ரூ.1,20,000 மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், ரூ.3,15,000 மதிப்பீட்டில் 21 பயனாளிகளுக்கு நவீன செல்லிடப் பேசிகளும், ரூ.12,000 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளும், ரூ.2,10,000 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு Neo-Bolt மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ரூ.32,760 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டிகளும், ரூ.59,000 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் துறையின் சார்பாக ஒரு நபருக்கு புதிய மின் இணைப்பு ரூ.5,600 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. ஆகக் கூடுதலாக 1,242 பயனாளிகளுக்கு ரூ.3,79,11,517- (ரூபாய் மூன்று கோடியே எழுபத்து ஒன்பது லட்சத்து பதினொன்றாயிரத்து ஐநூற்று பதினேழு மட்டும் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ.ராமலிங்கம் (கும்பகோணம்), அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், துரை.சந்திரசேகரன் (தஞ்சாவூர்), டிகேஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), நா.அசோக்குமார் (பேராவூரணி), ஜவாஹிருல்லா (பாபநாசம்), மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கோட்டாட்சியர்கள் அக்பர்அலி (பட்டுக்கோட்டை), இலக்கியா (தஞ்சாவூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.