10 ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது ? - ப.சிதம்பரம்

10 ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது ? - ப.சிதம்பரம்

 ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரம் 

பாரதிய ஜனதா கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் மட்டுமே எஞ்சியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூசையப்பர் பட்டினம் புலிக்கண்மாய், வளையப்பட்டி, சூராணம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி என்பது எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். 10 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்தவர்கள் என்ன அநீதிகளை செய்தார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு ஆட்சியில் என்ன எஞ்சி இருக்கிறது? என்ன மிச்சம் இருக்கிறது என்றால் இரண்டு விஷயங்கள் ஒன்று வேலையின்மை, மற்றென்று விலைவாசி உயர்வு. ஏதாவது விலை பத்தாண்டில் குறைந்திருக்கிறதா? அல்லது கட்டுப்படுத்தி இருக்கிறார்களா? நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக கூறினார். ஆனால் இன்று விலை கொடிகட்டி பறக்கிறது‌.

கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கிறது. ஆனால் பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்ந்திருக்கிறது. காரணம் வரிக்கு வரி போட்டு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாயை மக்களாகிய உங்களிடம் இருந்து BJP உறிஞ்சுகிறது. அதன் காரணமாக எல்லா விலைகளும் உயர்ந்து விட்டது. சாம்பு முதல் தேங்காய் எண்ணெய் வரை செருப்பிலிருந்து ஸ்கூல்பேக் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. மருந்து விலை மட்டும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார். மேலும் ஒருபுறம் வேலையில்லாமை. இது போன்று கோரதாண்டவம் ஆடி நான் பார்த்ததே கிடையாது. படித்த இளைஞர்கள் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனம் ஐஐடி. அங்கும் 30 சதவீதம் வேலையில்லாமை. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.

சிறுபான்மை சமுகத்தை ஒடுக்குகிறார்கள். தலித் சமுதாயத்தை ஒடுக்குகிறார்கள். கிருஸ்தவ அமைப்புகளுக்கு பல கிருஸ்தவ அமைப்புகள் உதவி செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளார்கள். எஃப்சிஆர்ஏ மூலம் அந்நிய நாட்டில் இருந்து தானமாக வரும் பணம் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்கள். ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் கிருஸ்தவ கோவில்களை சூறையாடுகிறார்கள். பாதிரியார்கள் தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ஸ்தாபனங்கள் இஸ்லாமியர்களுடைய மத வழிபாடு, உடை, உணவு பழக்கவழக்கங்களை அனைத்தையும் தாக்குகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு விலை கிடையாது‌.

இளைஞர்களுக்கு வேலை கிடையாது. குடும்பத் தலைவிகளுக்கு கொடுமையான சுமை, விலைவாசி உயர்வு எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் இருந்தது போதும். காங்கிரசை ஒழித்து விட்டால் அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்றால் கைது செய்து ஜெயிலில் போடுவதா? யார் இந்த அதிகாரம் தந்தது. எந்த அரசியல் சாசனத்தில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். பாஜகவின் அடக்குமுறை ஒடுக்குமுறை ஆட்சி ஒழிய வேண்டும் மீண்டும் ஜனநாயகம் மலர வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை சுதந்திரமாக அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய உரிமை, சுதந்திரமா தேர்தலில் போட்டியிடும் உரிமை, ஆட்சி அமைக்கக்கூடிய உரிமை நமக்கு வேண்டும். அதற்காகத்தான் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மூன்று ஆண்டுகளில் முத்தான முத்திரை பதித்த பல திட்டங்களை தந்திருக்கிறார். இதுபோன்ற திட்டங்கள் தொடர இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார் .

Tags

Next Story