தங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்: இளைஞரை தாக்கிய திமுகவினர்
திருப்பூரில் தங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டதற்கு இளைஞரை திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த திவாகரன்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான இன்று தங்கள் பகுதியில் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்காளர் உதவி மையம் அமைத்து வாக்களிக்க செல்வோர்களிடம் இறுதி நேர பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 36-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள மாமன்ற உறுப்பினர் திவாகரனிடம் வாக்கு சேகரிக்கும் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு எங்களுடைய மிலிட்டரி காலனி பகுதிக்கு என்ன செய்து கொடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக மாமன்ற உறுப்பினர் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேள்வி கேட்ட கார்த்திக் மற்றும் அவரது நண்பரை துரத்திச் சென்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை தொடர்ந்து கார்த்திக்கின் தாய் லதா திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமன்ற உறுப்பினர் இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.