திருப்பூர் பாராளுமன்ற தொகுதி கைப்பற்றுவது யார்?

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவது யார்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவது யார்? என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே நிலவி வருகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதியில் பின்னலாடை தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இங்குள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு பின்னலாடை தொழில் சரிவை சந்தித்துள்ளது.

கோபிச்செட்டிப்பாளையம் விவசாய பகுதியாக உள்ளது. அந்தியூர் மலைப்பகுதியாகும். பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியாகும். பவானியில் கைத்தறி, ஜமுக்காள தொழில் உள்ளது. பின்னலாடை மற்றும் விவசாயம் நிறைந்த பகுதியாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண்கள், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண்கள், 250 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை கவரும் வேட்பாளருக்கு வெற்றி எளிதாக வசமாகும் என்ற நிலை உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.சுப்பராயன் உள்ளார். திருப்பூரை சேர்ந்த இவர் கடந்த முறை இதே கூட்டணியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார். எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்ற தொகுதியில் கே.சுப்பராயன் நன்கு அறிமுகமானவர் என்பதால் இந்த முறையும் மக்கள் எளிதில் அடையாளம் கண்டு வாக்களிக்கும் நிலை உள்ளது. அதுபோல் தி.மு.க. கூட்டணி பலமும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அந்தியூர், திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதி தி.மு.க.வசம் உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெற்றால் வெற்றி எட்டும் தூரத்தில் தான் என்பதை அறிந்து பணியாற்றி வருகிறார்கள். இது போல் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலம் பெருந்துறையை சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளதால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கினால் மக்கள் ஆதரவு இருக்கும் என்ற எண்ணத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரை அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கியுள்ளது. சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் வாக்காளர்களை கவர முடியும் என்று எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.வினர் உள்ளனர். கோபிச்செட்டிப்பாளையம், பவானி, பெருந்துறை, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிகள் அ.தி.மு.க.வசம் உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

மேலும், பா.ஜனதா கூட்டணி கட்சி சார்பில் திருப்பூர் தொகுதிக்கு வேட்பாளராக கோவையை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மத்திய மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சென்று ஓட்டுக்களை பெற தேர்தல் பிரசாரத்தை கையில் எடுத்துள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன், அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலம், பா.ஜனதா வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோருக்கு இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. மும்முனைப்போட்டியில் வெற்றி பெறுவது யார்? திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவது யார்? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags

Next Story