காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை திமுக ஏன் செயல்படுத்தவில்லை?

காவிரி- திருமணிமுத்தாறு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை திமுக அரசு ஏன் செயல்படுத்தவில்லை? என பாஜ, மாநில துணைத் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நாமக்கல் மாவட்டத்தில் காவேரி- திருமணிமுத்தாறு ஆகிய 2 ஆறுகளின் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பரமத்தி-வேலூரில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ.ஆர். காந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி இராமலிங்கம், நாமக்கல் மாவட்டத்தில் பெரிதும் விவசாயிகளுக்கு பயன்தரும் திட்டமான காவேரி- திருமணிமுத்தாறு ஆகிய 2 ஆறுகளின் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சிறப்புரையாற்றி பேசினார்.

அப்போது கட்சி தொண்டர்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசுக்கு கோஷம் எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், அவர் பேசுயதாவது: பாஜக தேச நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஊழல் மலிந்த அரசாக செயல்படுகிறது.சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன் பெரும் வகையில் காவேரி- திருமணிமுத்தாறு ஆறுகளை இணைப்பதாக தேர்தல் வாக்குறுதி தந்து விட்டு இப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விட்டனர். 85 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு விவசாய நிலம் பயன்பெறும் வகையில் காவிரி உபரி நீரை திருப்பி விட்டால் புதிதாக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இவ்வளவு சிறப்புமிக்க திட்டத்தை திமுக செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றிவிட்டது.

இந்த தொகுதியில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி கூறி, திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு திட்டத்தை நிறைவேற்றவில்லை. அதற்காக மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் திமுக வேட்பாளரை விவசாயிகள் நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை.

மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவேன் என்று கூறிய 80 சதவீத திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தவில்லை. மாநில சுயாட்சி என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் ஏன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை? பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குளச்சல் துறைமுகம், குலசேகரப்பட்டணம் ஏவுதளம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் தமிழகத்திற்கு தந்துள்ளார். ஆனால், நாமக்கல், சேலம் மாவட்டங்கள் பயன்பெறும் காவிரி திருமணிமுத்தாறு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மாநில அரசு ஏன் பயன்படுத்தவில்லை? திமுகவினர் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு பல்வேறு துறைகளில் முறைகேடு செய்து பெற்ற பணத்தை கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கின்றனர். அறிஞர் அண்ணாவால் தமிழக முன்னேற்றம் என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்ட கட்சி இன்று மது & போதை விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அயலக பிரிவு நிர்வாகிகள் இதற்கு துணையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இவர்களின் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடைபெறுவது தெரிய வந்துள்ளது. தமிழ், தமிழர் வளர்ச்சி என்று கூறிக் கொள்ளும் திமுக அரசுக்கு அயலக பிரிவு எதற்காக போதை பொருள் கடத்துவதற்காகவா?? இந்தியாவிலேயே தமிழகம்தான் போதை பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக உள்ளது. இது குறித்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பாஜக மாநில தலைவரும், நானும் ஆளுநரை சந்தித்து இது குறித்து மனு அளித்துள்ளோம். வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக பண பலத்தை நம்பி தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு வழிகாட்டு மக்களாக இருந்து தேர்தலில் பணம் வாங்காமல் திமுகவிற்கு வாக்கு அளிக்க கூடாது என்ற உறுதியோடு நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி வரவேண்டும் என்றால் மோடியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி- திருமணிமுத்தாறு ஆறுகளை இணைக்கும் வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்றால் மத்திய அரசின் சிறப்பு நிதியை பெற்றுக் கொண்டு பெற்றுத் தந்து திட்டம் நிறைவேற்றப்படும்,இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு இந்தியாவின் ஆட்சி பீடத்தில் பாரதிய ஜனதா கட்சி தான் கோலோச்சும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம் சிறப்புரையாற்றி பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராஜேஸ்குமார், மாவட்ட பார்வையாளர் டாக்டர் சிவகாமி பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம். சுபாஷ், துணைத் தலைவர் ஆர்.ஈஸ்வரன் உள்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

Tags

Next Story