நல்லாட்டூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பதில் தாமதம் ஏன்?
திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம், அருகே இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.
இது குறித்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை உடனடியாக அகற்றி, அதே இடத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13.57 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டியது.
கட்டட பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்று வரை அங்கன்வாடி மையம் திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நல்லாட்டூர் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.