வெளிநாட்டில் இறந்த கணவர் : உடலை தமிழகம் கொண்டு வர மனைவி கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லாமல் பிழைப்புக்காக சவுதி அரேபியா நாட்டிற்கு கூலி தொழிலாளியாக சென்றுள்ளார். அவர் அங்கு சென்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, அடுத்த மாதம் விடுமுறையில் தாயகம் திரும்புவதற்காக விமான டிக்கெட் பதிவு செய்து, பணிபுரியும் நிறுவனத்தில் விடுமுறை கேட்டு காத்திருந்த நிலையில், நேற்று திடீரென அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அவருடன் பணிபுரிந்து வரும் சக தொழிலாளர்கள் அவரது வீட்டுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் உறைந்தனர். மலைச்சாமி இறந்த தகவல் தெரிந்த அந்த நிமிடம் முதல் அந்த குடும்பம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிராமமே சோகத்தின் எல்லைக்கே சென்றுள்ளது. சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊரான பிள்ளையார்குளம் கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர்களிடம் மலைச்சாமியின் மனைவி வீர ராஜேஸ்வரி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
உயிரிழந்த மலைச்சாமிக்கு வீர ராஜேஸ்வரி என்ற மனைவியும் வீர சஞ்ஜீவிதா, மோனிகா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகளும், ஹரிஹரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் முதுகெலும்பாய் இருந்த மலைச்சாமி அரபு நாடான சவுதி அரேபியாவில் இறந்து போனதால் ஆதரவின்றி தவித்து, அழுது புலம்பி வரும் அவரது குழந்தைகளும் மனைவியும் அவரது உடலை சொந்த ஊரான பிள்ளையார்குளத்திற்கு கொண்டுவர பாரத பிரதமர் நரேந்திர மோடியும் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பிஞ்சு குழந்தைகளின் கெஞ்சல் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
அவரது மகன் ஹரிஹரன் கூறும்போது, 'எங்கள் அப்பாவ பாக்கணும் போல இருக்கு அவரை பார்த்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது, வீடு கட்டணும், எங்க அக்காக்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கனும்ன்னு கனவோட வெளிநாடு சென்ற அவர் இறந்து விட்டதாக சொல்றாங்க... எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியவில்லை. அவரது உடலை எப்படியாவது ஊருக்கு கொண்டு வாங்க மோடி ஐயா, ஸ்டாலின் ஐயா' என அவர் அழுகுரலில் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.