கணவர் அனுமதியின்றி மனைவி கர்ப்பப்பை அகற்றம் - மருத்துவமனை முற்றுகை
மருத்துவமனை முற்றுகை
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மலங்காட்டைச் சேர்ந்தவர் பாபு (24). இவரது மனைவி ஷாலினி. இவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தொடர் இரத்தபோக்கு காரணமாக நேற்று மாலை இவரது தங்கை மகாலட்சுமி என்பவர் ஷாலினியை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்.பின்னர் ஷாலினியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த, மூலப்பாதையை சேர்ந்த குணசேகரன் (34) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த குணசேகரன் ஷாலினியின் கணவர் என பெயர் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஷாலினிக்கு ரத்தப்போக்கு அதிகமாக உள்ளதால் கர்ப்பப்பையை அகற்றி ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால், மருத்துவமனை நிர்வாகத்தினர், கணவர் என்ற முறையில் மேற்படி குணசேகரனிடம் போன் மூலம் அனுமதி கேட்டு நேற்று இரவு 9 மணியளவில் கர்ப்பப்பையை அகற்றி மருத்துவர்கள்ஆபரேஷன் முடித்துள்ளனர். மேலும் ஆபரேஷனுக்கு முன்பணமாக ரூ15000 குணசேகரன் கட்டியுள்ளார். இந்நிலையில் லாரி டிரைவர் பணியில் இருந்த ஷாலினியின் கணவர் பாபு இன்று தகவல் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்து பார்க்கும் போது, ஷாலினியின் கணவர் பெயர் குணசேகரன் என்று மருத்துவமனை பதிவேட்டில் இருந்துள்ளது. இதனை அறிந்த பாபு மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சந்திரலேகா,மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் பத்துக்கு மேற்பட்ட போலீசார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாபுவை சமாதானப்படுத்தி அவரது மனைவி ஷாலினியை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனுக்கு தெரியாமல் மனைவியின் கர்ப்பப்பையை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.