காட்டுப்பன்றி வேட்டை - 7 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டை - 7 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டவர்களுடன் வனத்துறையினர் 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கருப்பசாமி கோயில் பீட் அரிவாள் தீட்டி சரகத்தில், தெற்கு பிரிவு பகுதியில் அரசு பாதுகாப்பு காடு உள்ளது. இந்த காட்டில் அத்துமீறி நுழைந்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உத்தரவின் அடிப்படையில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் அசோக்குமார், வன காப்பாளர் தருணியா ஆகியோர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபர்களை தடுத்து நிறுத்திய வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் தாலுகா இடைகால் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (21), ராஜன் (27), மாரிமுத்து (50), முத்துக்குமார் (34), சுரேஷ் (34), விஜய் (23) மற்றும் அம்பாசமுத்திரம் தாலுகா மேல சேவல் கிராமத்தைச் சேர்ந்த பால்குமார் (21) ஆகியோர் என்பதும், வேட்டை நாய் உதவியுடன் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றியின் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், ஏழு நபர்களுக்கும் சேர்த்து 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story