குட்டிகளுடன் ஏரியில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்த காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாமல் ஏரி, குளங்களில் வரண்டு காணப்பட்டன. வனப்பகுதிகளில் வாழும் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள், பறவை இனங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கன மழையால் சுற்றுப்புற கிராம பகுதிகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் உள்ள ஏரி குளங்களிலும் அதிக அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரம்பியுள்ள தண்ணீர் வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வருகிறது. அந்த வகையில் ஜவளகிரி வனப்பகுதியில் குட்டிகளுடன் வலம் வந்த காட்டு யானைகள் சென்னமாளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஏரியில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்தன. குட்டி யானைகள் தாய் யானைகள் என மொத்தமாக 9 காட்டு யானைகள் ஏரியில் நீண்ட நேரமாக குளித்து மகிழ்ந்து தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்தன. இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். குளித்து கும்மாளமிட்ட காட்டு யானைகள் பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றன.