வனவிலங்குகள் நடமாட்டம்-நேர கட்டுபாடு விதித்த வனத்துறை!
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதைக்கு நேர கட்டுபாடு விதித்த வனத்துறையினர்.
கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி,தடாகம், பேரூர்,மருதமலை,போளுவாம்பட்டி,மதுக்கரை ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.குறிப்பாக காட்டுயானைகள், சிறுத்தை,மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகிறது. மக்கள் அதிகம் செல்லும் மருதமலை முருகன் கோவிலிலும் அனுவாவி முருகன் கோவிலிலும் காட்டுயானைகள் சிறுத்தை ஆகியவை அடிக்கடி தென்படுகின்றன.நேற்று முன் தினம் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை குட்டியானை உட்பட 8 காட்டுயானைகள் கடந்து சென்றுள்ளது.இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார்.தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கார் மற்றும் பேருந்துக்கு காலை 6 மணி முதல் மாலை 7 வரையிலும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story