ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
புத்தகரம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து சாலை ஓரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் புத்தகரம் கடைத்தெரு, கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெரு, புத்தகரம் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து எந்நேரத்திலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர். நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து காத்துள்ளனர்.