நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் பணிகள் துவங்குமா?

நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் பணிகள் துவங்குமா?

ரயில்வே 

நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் பணிகளுக்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, ரயில் பாதை அமைக்கும் பணியை துவங்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் மையப் பகுதியான, பெரம்பலூர் மாவட்டத்தில், ரயில் போக்குவரத்து வசதி இல்லை. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள அரியலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்கள் ரயில் போக்குவரத்து வசதி பயன்படுத்த வேண்டுமானால், அரியலூர் அல்லது திருச்சிக்கு செல்ல வேண்டும். அதனால், இந்த மாவட்ட மக்கள், 50 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, அரியலூர் - பெரம்பலூ - துறையூர் - தா.பேட்டை வழியாக, நாமக்கல் வரை, ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் ஏற்கனவே, எம்.பி. பாரிவேந்தர் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, மேற்கண்ட வழித்தடத்தில், நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், 108 கி.மீ., தூரம் புதிய ரயில் பாதை அமைத்து, ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக சர்வே நடத்த உத்தரவிட்டது. அதற்காக, ரூ. 16.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு பணி நிறுத்தப்பட்டது. அதையடுத்து, எந்த முன்னேற்றமும் இன்றி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாமக்கல் - அரியலூர் வரை, 116 கி.மீ., தூரம் புதிய ரயில் பாதைக்கு, ஃபைனல் லோகேஷன் சர்வே மேற்கொள்வதாக, மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. விரைவில் ரயில்பாதை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் என்பது, ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்த ரயில்பாதை அமைக்கப்படும்போது, ரயில் வசதி இல்லாத பெரம்பலூர், துறையூர் பகுதி மக்கள் பயன்பெறுவதோடு, நாமக்கலில் இருந்து டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்.

மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் நன்கு முன்னேற்றம் அடையும். எதிர்காலத்தில் இந்த திட்டம் நாமக்கலில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீட்டிக்கப்படும் போது, மேற்கு மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் டெல்டா பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதையாக அமையும். அதேபோல், அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு போன்ற பல நகரங்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையா பங்கு வகிக்கும். அதனால், விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, ரயில் பாதை அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story