வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?
சேதமடைந்த சாலை
வளசரவாக்கம் - ஆற்காடு சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள உட்புற சாலைகளில், மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வாக, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கோடம்பாக்கம் -போரூர் போக்குவரத்திற்கு முக்கிய சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது.
ஏற்கனவே, வளசரவாக்கம் நகராட்சியாக இருந்த போது, அங்கு சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பால், கால்வாய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. தற்போது, ஒவ்வொரு மழைக்காலத்திலும், வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில், மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் வளசரவாக்கம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெய் நகரில் இருந்து, போரூர் சிக்னல் வரை, 2.6 கோடி ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, இச்சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பெய்த மழையிலும், ஆற்காடு சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. எனவே, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் போது சாலை விரிவாக்கம் செய்து, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் மழைநீர் வடிகாலும் ஆபீசர் காலனி, எஸ்.வி.எஸ்., நகர், சாய்ராம் நகர், அம்பேத்கர் சாலை, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உட்புற சாலைகள் இணைக்கப்பட்டால், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.