தமிழ் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா...?

தமிழ் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா...?
தமிழ் பல்கலைக்கழகம்
தமிழ் பல்கலையில் 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 27 பேருக்கு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றும் 27 பேரை, மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அலுவலர் பணியாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் க.சக்திசரவணன், செயலாளர் கி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் க.பால்ராஜ் ஆகியோர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழக அலுவல்களை பணியிடங்கள் 222ல் தற்போது 109 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ் பல்கலைக்கழக அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 2017 -ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் ஆறு ஆண்டுகளாக அரசின் அனுமதியினை கோரியும், இதுநாள் வரையில் அனுமதி கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 27 தொகுப்பூதிய பணியாளர்களின் பணி நீட்டிப்புக்கு தமிழக அரசால் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 27 பணியாளர்களும் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் மற்றும் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அனுமதி கிடைக்காத நிலையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு ஓரளவுக்கு பல்கலைக்கழக பணிகள் தேக்கம் இன்றி நடைபெற்று வருகின்றன. இந்த 27 தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டால் பல்கலைக்கழக பணிகளில் அதிகம் தேக்கநிலை ஏற்படுவதோடு, 27 பணியாளர்களும் அவர்களை நம்பி உள்ளவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள்.

எனவே, காலி பணியிடங்களை நிரப்ப அரசின் அனுமதி வழங்கும் வரையிலாவது, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story