அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? விவசாயிகள் காத்திருப்பு
அரசு நெல் கொள்முதல் நிலையம்
கூடலூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் கோடை, சம்பா என 2 போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடலூர் வெட்டுக்காடு, தாமரைக்குளம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.கப்பா மடை, ஒட்டாண்குளம், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் நெல் கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 60 கிலோ (ஒரு மூட்டை) ரூ.1350-க்கு விற்பனையானது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர். மேலும் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு தவணை முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. போதிய அளவு இடவசதி இல்லாத விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க கூடலூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
Next Story