பணம் எண்ணும் இயந்திரம் வைக்கப்படுமா....?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகரில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலக வங்கிப் பிரிவில் பணம் எண்ணும் இயந்திரத்தை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், வங்கிப் பிரிவில் பணம் எண்ணும் இயந்திரத்தை வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர் வ.விவேகானந்தம் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மற்றும் தலைமை அஞ்சலக அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வங்கிப் பிரிவில் சிறுசேமிப்பு, நிரந்தர வைப்புக் கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு ஆகியவை துவங்கி செயல்பாட்டில் உள்ளது. மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் இந்த பிரிவில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
இங்கு பணம் எண்ணுவதற்கு இயந்திரம் இல்லாத காரணத்தினால், அஞ்சல் துறை அலுவலர்கள் பணம் வாங்குவதற்கும், கொடுப்பதற்கும் காலதாமதம் ஆகிறது எனவே, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக வங்கிப் பிரிவில் பணம் எண்ணும் இயந்திரத்தினை வைக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் அலுவலர்களுக்கும் வசதியாக இருக்கும் . மேலும், மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மேற்கண்ட பிரிவிற்கு அரசு அலுவலர்கள் பெண்கள், முதியோர், ஓய்வூதியர்கள் அஞ்சலக சிறு சேமிப்பு முகவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் வங்கி பிரிவிற்கு இரண்டு அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்" என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.