சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும் வருமா?

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும் வருமா?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளில் 57% மேல் நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளில் 57% மேல் நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களை கோடை வெப்பம் ஒருபக்கம் வாட்டி வதைத்துவரும் நிலையில் மறுபக்கம் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளில் 57 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்றுதான் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

ஆனாலும், வெயில் காரணமாக ஏரிகளில் வேகமாக தண்ணீர் ஆவியாவதால், இந்த தண்ணீர் எத்தனை நாளைக்கு இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த அச்சத்துக்குக் காரணம், சென்னையில் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் நீா் இருப்பு 50 சதவீதமாக இன்று சரிந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 60 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, இன்று 50 சதவீதமாகக் குறைந்துள்ளதுதான் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது.

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும், மக்களின் குடிநீா் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதோடு, வெயில் காரணமாக ஏரி, குளம் போன்ற குடிநீா் ஆதாரங்களில் தண்ணீா் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. இதன்படி, சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரங்களான, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளின் நீா்இருப்பு திங்கள்கிழமை நிலவரப்படி, 6,702 மில்லியன் கன அடியாக சரித்து விட்டது. இது கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, 7,020 மில்லியன் கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது மொத்த கொள்ளளவில் தற்போது 50.69 சதவீதம் நீா் மட்டுமே இருப்பில் உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 898 மில்லியன் கன அடியாக நீா் இருப்பு உள்ளது. மாநகர மக்களின் குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 518 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,960 மில்லியன் கன அடியாக உள்ளது. குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 242 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், தற்போது நீா் இருப்பு 380 மில்லியன் கன அடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள 6 ஏரிகளில் வீறாணம் முழுவதும் வறண்டுவிட்ட நிலையில், புழல் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு 425 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 200 மில்லியன் கன அடியில் தற்போது நீா் இருப்பு 108 மில்லியன் கன அடியாக உள்ளது. இதில் குடிநீா் தேவைக்காக 23 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

மேலும், 3,645 கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் திங்கள்கிழமை 2,356 மில்லியன் கன வரை நீா் இருப்பு உள்ளது. மக்களின் குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 155 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே, ஏரிகளின் நீா் இருப்பு 50 சதவீதம் வரை சரிந்த நிலையில் இனிவரும் காலங்களில் சென்னையின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Tags

Next Story