இந்தியா கூட்டினை வெற்றி: அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் அறைகூவல்

ஆலோசனையில் ஈடுபட்ட பனியன் உரிமையாளர்கள்
பாஜகவை தோற்கடித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் அறைகூவல், கடந்த 10 ஆண்டு கால தொழிலாளர் விரோத பாரதிய ஜனதா அரசைத் தோற்கடித்து, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் அறைகூவி அழைப்பு விடுத்துள்ளன.
திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாயன்று அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத்,
பொருளாளர் கே.நாகராஜ், ஏஐடியுசி பனியன் சங்கப் பொதுச் செயலாளர் என்.சேகர், நிர்வாகி செந்தில்குமார், எல்பிஎப் பனியன் சங்கப் பொதுச்செயலாளர் க.ராமகிருஷ்ணன், தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, நிர்வாகிகள் செந்தில், ரஜினி, எச்.எம்.எஸ். செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மு.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்கள் வாழ்வில் மிகப்பெரும் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராதது மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கும் வேலைவாய்ப்பையும் சீர்குலைத்துள்ளது. குறிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளைக் கண்மூடித்தனமாக பின்பற்றிவரும் பாஜக அரசு,
முதலாளிகளின் வெறித்தனமான லாபத்தைப் பெருக்குவதற்காக, தொழிலாளி வர்க்கம் நூற்றாண்டு காலமாகப் போராடிப் பெற்ற சட்டஉரிமைகளைப் பறித்துள்ளது. 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக சுருக்கியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கவும், சட்ட சமூகப் பாதுகாப்பு இல்லாதவர்களாக மாற்றவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நிரந்தர வேலையை பறிப்பதுடன், காண்ட்ராக்ட், அவுட் சோர்ஷிங் என மாற்றி கண்ணியமான வேலைவாய்ப்பை மறுத்து “அத்துக்கூலிகளாக” மாற்றி வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 9 ஆண்டு காலத்தில் தொழிலாளர், முதலாளிகள், அரசு பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக்கூட்டத்தை ஒரு முறை கூட கூட்டவில்லை. பாஜக அரசின் தவறான கொள்கைகள் காரணமாக வேலைவாய்ப்பு நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பொது முடக்கம், பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு, டிராபேக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் நிலைகுலைந்துள்ளது.
கணிசமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன. ஒரு பகுதி நிறுவனங்கள் தொழிலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் வங்கதேசத்தில் இருந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 2016ஆம் ஆண்டு இங்கு வந்த ஆடைகளின் மதிப்பு 152 மில்லியன் டாலராக இருந்தது.
தடுப்புவரி நீக்கப்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டு இங்கு வரக்கூடிய ஆடைகள் மதிப்பு 750 மில்லியன் டாலருக்கு மேல், அதாவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உள்நாட்டு தொழில் துறையினர், தொழிலாளர் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறைந்து அவர்களின் உண்மை வருமானமும் சரிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் குழுக்கடன் என்ற பெயரில் கடன் வலையில் சிக்கியுள்ளனர். விலைவாசி உயர்வு தொழிலாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து உழைக்கும் மக்களைத் தி-சை திருப்புவதற்கு, மதவாத வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது.
எனவே பேரழிவிலிருந்து திருப்பூரை மீட்பதற்கு, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு பாரதியஜனதா அரசை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச்செய்ய வேண்டும். உழைக்கும் மக்கள் நலனைப் பாதுகாக்கவும், நாட்டைப் பாதுகாக்கவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வரும் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இதற்காக, தொழிற்சங்கங்கள் சார்பில் 10 ஆயிரம் துண்டறிக்கைகளை வெளியிட்டு, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தொழிலாளர்களை சந்தித்துப் பிரச்சாரம் செய்வது என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
