மின் கம்பத்தில் இன்சுலேட்டருக்கு பதில் மது பாட்டில் புகைப்படம் வைரல்
இன்சுலேட்டருக்கு பதில் மது பாட்டில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பத்தில் இன்சுலேட்டர் பீங்கானுக்கு பதில் மதுபாட்டிலை கொண்டு மின்கம்பிகள் கட்டப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். மின்வாரிய ஊழியர்கள் அல்லாதவர் மதுபாட்டிலை பொருத்தியதாக மின்சாரத்துறையினர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் கம்பத்தில் இன்சுலேட்டர் பீங்கானுக்குப்பதில் மதுபாட்டிலை கொண்டு மின்கம்பிகள் கட்டப்பட்டிருந்த சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள விவசாய வயலுக்கு விவசாய பயன்பாட்டிற்கு பயன்படும் போர்வெல்லுக்கு மின்சாரம் செல்லும் மின்கம்பம் அமைந்துள்ளது. அந்த மின்கம்பத்தில் இன்சுலேட்டர் பீங்கானுக்கு பதில் மது பாட்டிலை கட்டி வைத்து அதில் மின்கம்பி கட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்சுலேட்டர் பீங்கானுக்கு பதில் மதுபாட்டில் கட்டப்பட்’டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து மின்சார வாரியத்தினர் மதுபாட்டிலை அகற்றிவிட்டு இன்சுலேட்டர் பீங்கானை கொண்டு வந்து மாற்றினர். தொடர்ந்து குத்தாலம் பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருட்செல்வன் குத்தாலம் காவல் நிலையத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் இல்லாத மர்மநபர் இன்சுலேட்டர் பீங்கானுக்கு பதில் மதுபாட்டிலை கட்டியுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். உயர்மின்அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் கம்பத்தில் ஏறி மதுபாட்டிலை மர்மநபர் பொருத்துவது சாத்தியமில்லாத செயலாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story