எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... ஜேசிபி மூலம் தேங்கிய நீரை அள்ளி ஊற்றிய அவலம் !

காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக அங்காங்கே தேங்கிய மழைநீர், ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் வழியாக பல்வேறு குடியிருப்புக்கு செல்லும் வழிகளும் உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக பிரிந்த கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள கோயில் வளாகம் முழுவதும் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு இருந்த மின்மாற்றியின் ஓயர் வெடித்ததால் அப்பகுதியில் மின்சாரமும் இல்லை.
இந்நிலையில் இந்நீரை வெளியேற்ற மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த நடவடிக்கை தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஒரு டீசல் மோட்டாரை அமைத்து நீரை கால்வாய்கள் வழியாக வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ஜே சி பி இயந்திரத்தைக் கொண்டு மழைநீரை அள்ளி எடுத்து அடுத்த பகுதியில் ஊற்றும் நிலையை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறாக எடுத்து ஊற்றிய தண்ணீர் அடுத்த பக்கத்தில் சேரும் போது எப்படி இறைப்பார்கள் என்று கேள்வியும் எழுந்தது.
ஜேசிபியின் வாடகை மணி கணக்கில் இருக்கும் நிலையில் இதற்காக பெருந்தொகை செலவு செய்வதை தவிர்த்து மின் மோட்டார் மூலம் இறைத்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர். இது மட்டுமில்லாமல் இதுபோன்று ஐடியாவை அளித்தவர் யார் என்று வசைபாடியும் சென்றனர்.
