சிறுவனின் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது

சிறுவனின் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது
கைதான தமிழரசி
கொல்லங்கோடு அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன் துறையை சேர்ந்தவர் ராஜன் (35). மீனவர். இவருக்கு ஷைஜி என்ற மனைவியும் ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு. நேற்று மதியம் சிறுவன் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு 40 வயதுடைய ஒரு பெண் ஒருவர் வந்து, சிறுவனின் கழுத்தில் கிடந்த ஆறு கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு தாய் ஷைஜி வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, நகை பறித்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்தப் பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த தமிழரசி என்பதும், இவர் தூத்துக்குடி மாவட்டம் உவரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் பெயரை கூறி காணிக்கை கேட்டு வந்ததும் தெரிய வந்தது. போலீசார் தங்கச் சங்கிலியை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story