தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண். நிதி நிறுவன ஊழியர்கள் இருவரை கைது செய்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம், வாய்க்கால்ரோடு பகுதியை சேர்ந்தவர் அல்லாபிட்சை , இவர் கட்டிடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு பர்வீன் பானு என்ற மனைவியும், 14 வயது மகளும் 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். பர்வீன் பானு, பல இடங்களில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அல்லாபிட்சை கடந்த சில மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள (முத்தூட் பின் கார்ப்) என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தனி நபர் கடனாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று உள்ளார். இதற்காக மாதம் தோறும் 10ம் தேதிக்குள் 3,700 ரூபாய் தவணை தொகை செலுத்த வேண்டும். இந்நிலையில் சில மாதங்களாக தவணை தொகையை அல்லா பிட்சை செலுத்தி வந்த நிலையில், சரியான வருமானம் இல்லாததால் இந்த மாதம் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் முத்தூட் பின் கார்ப் நிறுவன ஊழியர்கள் கார்த்திக், தாமோதரன், நித்தீஸ்குமார், ராகுல் ஆகியோர், அல்லாபிட்சையின் வீட்டிற்கு நேற்று இரவு 8மணிக்கு சென்று தவணை தொகையை செலுத்துமாறு கூறி உள்ளனர். இந்த மாதம் போதிய வருமானம் இல்லாத நிலையில், தவணை தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அடுத்த மாதம் செலுத்தி விடுவதாக கணவன், மனைவி இருவரும் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள் இரவு 10 மணி வரை அவரது வீட்டில் இருந்ததோடு, தவணை தொகையை கொடுத்தால் மட்டுமே செல்ல முடியும் என்று கூறி உள்ளனர்.

தற்போது பணம் இல்லை என்று அல்லா பிட்சை கூறியதும், ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள், தவணை தொகையை செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தானே என்று திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த பர்வீன் பானு வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தூக்கிட்ட சேலை அறுந்து விழுந்ததால், உயிர் பிழைத்தார்.

இதுகுறித்து அல்லாபிட்சை அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் நிதி நிறுவன ஊழியர்கள் கார்த்தி, தமோதரன், நித்தீஸ்குமார், ராகுல் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன ஊழியர்கள் இரவு நேரத்தில் தவணை தொகையை வசூலிப்பதற்காக சென்றதும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கணவன், மனைவியை பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்கள் தாமோதரன் மற்றும் நித்தீஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story