பெண் தீக்குளித்து தற்கொலை உறவினர்கள் போராட்டம் !
போராட்டம்
குமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன் மகன் ஷானு (29). இவரது மனைவி தீபா (27). இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஷானு சவுதி அரேபியாவில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் இவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் சவுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீபா திடீரென உடலில் மண்ணெண்ணெய் விட்டு தீ வைத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என கூறப்படுகிறது. தகவலின் பேரில் அருமனை போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தீபாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி திவ்யா என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். இதற்கு இடையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தீபா உடல் பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது.
ஆனால் தீபாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை பெற்று சென்றனர். இது தொடர்பாக பத்மநாபபுரம் ஆர்டிஓ விசாரணை துவக்கி உள்ளார்.