சுயஉதவிக்குழு கடனை கட்ட முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுயஉதவிக்குழு கடனை கட்ட முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தற்கொலை 

சேலத்தில் சுயஉதவிக்குழு கடனை கட்ட முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாத வேதனையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுயஉதவிக்குழுவில் கடன் சேலம் வ.உ.சி. மார்க்கெட் பின்புறம் உள்ள பெரியார் நகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பொற்கொடி (வயது 43). இவர்களுக்கு அருண்குமார் (22) என்ற மகன் உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொற்கொடி மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடன் தவணை தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். கடன் தொகையை செலுத்த முடியாததால் விரக்தி மற்றும் வேதனை அடைந்த பொற்கொடி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் கொடுத்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்கள் யாராவது வந்து அவருக்கு கடனை செலுத்துமாறு கூறி தொந்தரவு செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story