பணம் கேட்டு கொலை மிரட்டல் - பெண் புகார்
காவல்நிலையத்தில் பெண் புகார்
தேனி மாவட்டம் தேனி அருகே வீரசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் வடிவுக்கரசி. இவர் தனது கணவர் மணிகண்டன் உடன் வசித்து வருகிறார் இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சிவகுமாரின் மனைவி போதுமணி என்பவரிடம் வடிவுக்கரசி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்று கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்பும் போதுமணி கையெழுத்திட்ட கடன் பத்திரத்தை வைத்து மேலும் 80,000 பணத்தை கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டுவதாக குற்றச்சாட்டாக கூறுகின்றனர்.
பின்னர் போதுமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர் காளிதாஸ் என்பவர் கடந்த 5 ஆம் தேதி வடிவுக்கரசி கணவர் மணிகண்டன் மீது பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றுவதாக போலி புகாரை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று இரவே போதுமணி மற்றும் வழக்கறிஞர் காளிதாஸ் இருவரும் வடிவுக்கரசியின் வீட்டிற்குச் சென்று பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுவதாகும் தன்னை ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவதாகவும் வடிவுக்கரசி குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பின்னர் நேற்று முன்தினம் மணிகண்டனுக்கு தொலைபேசியில் அழைத்த காளிதாஸ் உன் மீது தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விசாரணைக்கு வா என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மணிகண்டன் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பிறகும் கையெழுத்திட்ட கடன் பத்திரத்தை வைத்து மேலும், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் போதுமணி மற்றும் வழக்கறிஞர் காளிதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் கடன் பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என வடிவுக்கரசி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.