பெண் கட்டிட தொழிலாளி கொலை - கொத்தனார் உட்பட இருவர் கைது
வைஜெயந்தி
மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (31) என்பவர் கடந்த 22-ஆம் தேதியன்று தனது மனைவியான வைஜெயந்தி ( 28 ) என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை எனக்கூறி மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வைஜெயந்தி என்ற பெண்ணை காணவில்லை எனக்கூறி கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மதுரை விரகனூர் அருகே வைகையாற்று பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வைகையாற்று பகுதியில் கிடந்த உடலானது ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தியின் உடல் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து வைஜெயந்தின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த நிலையில் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளம்பெண் வைஜெயந்தி கட்டிட பணியாளராக (சித்தாள்) கொத்தனாரான சிவகங்கை மாவட்டம் பிஷர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவுடன் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் 21 ஆம் தேதி கொத்தனார் கருப்பையா வைகை ஆற்று பகுதியில் வைஜெயந்தியிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த போது திடிரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கருப்பையாவின் நண்பரான மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தனும் சேர்ந்து வைஜெயந்தியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை ஆற்றுப்பகுதிக்குள் போட்டுவிட்டு தப்பியது தெரியவந்துள்ளது.
இதனைடுத்து வைஜெயந்தியை கொலை செய்த வழக்கில் கருப்பையா மற்றும் ஜெயகாந்தன் ஆகிய இருவரையும் சிலைமான் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருடைய செல்போன்களின் டவர் லொக்கேசன் ஆகியவற்றின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில், வைஜெயந்தி தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் திடீரென தன்னை விட்டு விலகியதால் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் அடிக்கடி ஏற்பட்டதாகவும் இதனால் சம்பவத்தன்று வைகை ஆற்றங்கரைக்கு வரவழைத்து பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இதனால் ஆத்திரம் அடைந்து வைஜெயந்தியை தலையில் அடித்ததாகவும் அதன் பின்பு தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மதுரையில் கட்டிடப் பணியாளராக பணிபுரிந்த இளம் பெண் திருமணத்தை மீறிய உறவில் அவருடன் பணிபுரியும் கொத்தனார் கருப்பையாவை நம்பி வைகை ஆற்றங்கரைக்கு சென்ற நிலையில் அங்கு கருப்பையாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வைஜெயந்தியை அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் கருப்பையா தனது நண்பருடன இணைந்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.