ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் நிர்வாகி அதிமுக-வில் இருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் நிர்வாகி அதிமுக-வில் இருந்து நீக்கம்

எடப்பாடி பழனிச்சாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடியை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும், வழக்கறிஞருமான மலர்கொடி உள்ளிட்ட மேலும் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மலர் கொடியை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.'' எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story