தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு - போலீசார் விசாரணை

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு. பொதுமக்கள் அடித்து 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்கா பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பொன்வேல் மனைவி செல்வபிரியா (வயது 28). இவர், நேற்று காலை 11 மணிக்கு வீட்டில் சுடுதண்ணீர் வைத்து கொண்டிருந்தபோது 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நகையை பாலீஷ் போடுவதாக செல்வபிரியாவிடம் கூறினர். அதற்கு செல்வபிரியா தன்னுடைய நகைக்கு பாலீஷ் போட வேண்டாம் என்று கூறியுள்ளார். உடனே அந்த 2 பேரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். செல்வபிரியா தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது 2 பேரும் திடீரென அவரது கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்தனர். தப்பி செல்ல முயற்சி இதை சற்றும் எதிர்பாராத செல்வபிரியா நகை பறிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் திரண்டு ஓடி வந்தனர். அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இருவரையும் தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (28), சோனுகுமார் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இருவரும் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறி செல்வபிரியாவிடம் நகை பறித்தது தெரிய வந்தது. இருவரும் வேறு யாரிடமும் இதுபோன்று நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story