எஸ்பி அலுவலகம் முன்பு கணவருடன் பெண் தரையில் அமர்ந்து போராட்டம்
நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகம் முன்பு தனது கணவருடன் பெண் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி வெள்ளாளர் கீழத் தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி சரோஜினி. மோகன் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மணிகண்டன் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை வட்டிக்காக சரோஜினி வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப தேவைக்காக கூடுதலாக 2 லட்சம் ரூபாயும் வாங்கி உள்ளார். இதற்கு வங்கி காசோலை மற்றும் கையெழுத்திடாத காசோலையும் சரோஜினி மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
மாதம் 24 ஆயிரம் வட்டி கட்டி வந்துள்ளார் சரோஜினி. இந்த நிலையில் சரோஜினிக்கு சொந்தமான பூதப்பாண்டி பகுதியில் உள்ள நிலத்தை, வட்டி கட்ட வேண்டாம் தனது பெயரில் எழுதி தருமாறு கூறி மணிகண்டன் வற்புறுத்தி உள்ளார். ஆனால் சரோஜினி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சரோஜினி வீட்டில் இருந்தபோது மணிகண்டன் மற்றும் மிதின் என்பவரும் சேர்ந்து சரோஜினியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த சரோஜினி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று கூறி நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகம் முன்பு தனது கணவருடன் தரையில் அமர்ந்து இன்று சரோஜினி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.