மித்ரவயலில் கார்த்தி சிதம்பரத்திடம் பெண்கள் வாக்குவாதம்
வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்கள்
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ப.சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மித்ராவயலில் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் ஒரு பெண்மணி, சிதம்பரம் பேசும் போது குறுக்கிட்டு தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை பேசினார்.
தான் பேசி முடித்தவுடன் பேசுங்கள் என்று கூறிய சிதம்பரம் பேசி முடித்தவுடன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக., வேட்பாளர் சேவியர்தாஸ் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அதே சில பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு, அவரிடமும் தங்கள் பிரச்சனைகளை தெரிவித்தனர்.
என்னை ஒருமுறை ஜெயிக்க வைத்தால் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று கூறி அவர் கிளம்பினார். இந்நிலையில் காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மித்ராவயலில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசி முடித்தவுடன் தங்கள் பகுதியில் மருத்துவமனை வேண்டும் என்று அதே பெண்மணி மீண்டும் வாய் திறந்ததும் தொண்டர்கள் கொதித்து எழுந்தனர்.
அந்தப் பெண் கேள்வி கேட்டதும் கார்த்தி அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அதிமுக ஆட்சியில் தான் இங்கு இருந்த மருத்துவமனை எடுத்துச் சென்றார்கள். அதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக வேட்பாளிடம் கேட்காமல் ஆரத்தி எடுக்கிறார் என்று வாக்குவாததில் ஈடுபட்டனர். அதற்கு வந்த பெண்மணியும் நான் அனைத்து வேட்பாளர்களிடம் கேட்கத்தான் செய்கிறேன் என்று பேசியதை தொடர்ந்து பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.