பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் 5-வது வார்டு பெரியப்பட்டறை பகுதியில் சுமார் 65 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.இந்தப் பகுதி மக்கள் குடிநீர் வசதி, கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரும் சம்பந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
]இதுநாள் வரை மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளாததாலும் அதிகாரிகளிடம் மற்றும் அரசியல் வாதிகளிடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் காட்பாடி அடுத்த பெரியபட்டறை பகுதியில் குடியாத்தம் சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய போலீசார் மற்றும் வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலாவது மண்டல குழு தலைவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். மக்களின் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் இந்த பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம் இது நாள் வரை எங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்வதில்லை பெயரளவுக்கு மட்டுமே இந்த பகுதியை மாநகராட்சியில் உள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல கோடி ரூபாய் செலவில் பல நவீன வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் எங்கள் பகுதிக்கு எந்த ஒரு வசதிகளும் செய்வதில்லை. இதுகுறித்து மண்டல அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வார்டு கவுன்சிலர் என அனைவருக்கும் சொல்லியும் மனு அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லாத நிலை உள்ளது. நாங்கள் என்ன பாவம் செய்தோம். பெரியபட்டறை என்ற இந்த பகுதி சினிமா படத்தில் வரும் அத்திப்பட்டி போல் யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. இதனால் எங்கள் கஷ்டங்களை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான அதிகாரிகளுக்கு ஏரி பட்டறை எங்க இருக்கிறது என்று தெரியாத நிலைமை உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.