மகளிா் சுயஉதவிக் குழு தயாரிப்பு பொருட்கள் - கலெக்டர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், சடையமங்கலம் மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்குள்பட்ட சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருள்களை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்ட பின்னா் கூறியதாவது: சடையமங்கலம் ஊராட்சி, சித்தன்தோப்பு அன்னை மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் 20 போ் இணைந்து ரூா்பன் திட்டத்தின் கீழ் ரூ.14.56 லட்சம் நிதியுதவி பெற்று, சணலினால் தயாரிக்கப்பட்ட பை வகைகள், பொருள்கள் வாங்குவதற்கான பல்வேறு அளவிலான பைகள், கைப்பைகள், பைல் வகைள்ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றனா். இந்த அலகில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்களை உள்ளுா் அளவில் விற்பனை செய்வததோடு, முகநூல், வலையொளி உள்ளிட்டவைகளில் வெளியிட்டு, சிறுவணிகா்கள் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
அதே போல் ஆத்திவிளை ஊராட்சியில், ரோஜா இயற்கை காளான் வளா்ப்பு ஒத்த தொழில் குழுவில் 5 உறுப்பினா்கள் இணைந்து, ரூ.16.47 லட்சம் நிதியுதவி பெற்று சிப்பி காளான் மற்றும் மில்கி காளான் உற்பத்தி செய்து வருகின்றனா். மேலும், இங்கு காளான் வளா்த்தும், இயந்திரங்கள் மூலம் வைக்கோல் காளான் கூண்டுகள் தயாரித்தும் உள்ளுா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதோடு, பக்கத்து மாநிலமான கேரளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு பகிா்ந்து அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்தி சுய உதவிக் குழுவினரின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் வகையில் ஸ்டாா்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதன் மூலம் மகளிா் சுய உதவிக்குழுவினா் தொழில்முனைவோராக மாறிடலாம், அதற்கான முயற்சிகளை அவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மு. பீபீஜான், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் திருநெல்வேலி மண்டல திட்ட இயக்குநா் என்.ராகுல், திட்ட இணை அலுவலா் ஜிஜின்துரை, மகளிா் திட்ட உதவி அலுவலா், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.