சேலத்தில் ஹலோ எப்.எம். சார்பில்மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

சிறப்பு நிகழ்ச்சி
தமிழகத்தின் நம்பர் ஒன் பண்பலை வானொலியாக திகழ்ந்து வரும் ஹலோ எப்.எம். சார்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் லேடீஸ் டே என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நேற்று சேலம் அண்ணா பூங்கா எதிரே உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் உதவி மேலாளர் ராஜேந்திரன், வநேட்ரா முத்தாயம்மாள் கல்வி குழும இயக்குனர் செல்வகுமரன், பாண்டு ரங்கா சாரீஸ் உரிமையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தனி நடனப்போட்டி, ரங்கோலி, மெகந்தி, பெண்கள் தங்களது பேச்சுத்திறமையை வெளிப்படுத்தும் அல்லி தர்பார், திரைப்பட வசனங்களை சொல்லி தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ஆக் ஷன் குயின், பேஷன்வாக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கலந்து கொணடு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். பம்பர் பரிசாக கிருஷ்ணவேணிக்கு எல்.இ.டி. டி.வி.யும், 2-ம் பரிசாக சல்மாவுக்கு வாஷிங்மிசினும், 3-ம் பரிசாக நஸ்ரினுக்கு பிரிட்ஜ்-ம் வழங்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மிக்சி, மின் அடுப்பு, குக்கர் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன.
