ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!
தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் பாலாஜி எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக மணியாச்சி சொக்கநாதபுரத்தை சேர்ந்த சின்ன மாடசாமி (வயது 46) என்பவர் பணி செய்து வந்தார். இந்நிலையில், இன்று வழக்கம்போல அங்கு நிறுத்தி வைத்திருந்த ரயில் பெட்டிகளை தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே சின்ன மாடசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சின்ன மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.