தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை

கொலை

சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள நடைமேடையில் இரவு நேரத்தில் யாசகர்கள், குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் உள்பட பலர் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவு 8.30 மணி அளவில் அந்த நடைமேடையில் முதியவர் உள்பட 2 பேர் படுத்திருந்தனர். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த முதியவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அந்த நபரின் தலை மீது போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் சிலர் அந்த முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையானவருக்கு 45 வயது இருக்கும் என்றும், ஏதாவது ஒரு கடையில் வேலை பார்த்த தொழிலாளியாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அவருடன் தகராறில் ஈடுபட்ட முதியவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 60) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story