ஜன.31க்குள் தொழிலாளர் நல நிதி செலுத்தவேண்டும் - உதவி ஆணையர் தகவல்

பைல் படம்
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் நல நிதி சட்டம் பிரிவின்படி தொழில் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 31.1.2024-க்குள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் ஏதேனும் இருந்தால் அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கீடு செய்யப்பட்டு தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நல நிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006 என்ற முகவரிக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை என்ற பெயருக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
