நீர்நிலைகளை மேம்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம்
வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது.
வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனியாக அகற்ற வேண்டும். பல இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் சிலர் பயிர்வைத்திருந்ததால் பயிர்களும் உயிர்களே என்ற அடிப்படையில் அவற்றை எடுக்காமல் இருந்தோம்.
அந்த பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டிருக்கும். கோடைகாலம் என்பதால் பயிர்செய்திருக்கமாட்டார்கள். எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிலங்களை கையப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும். வேப்பூர் ஒன்றியத்திற்கு புதிய குளங்கள் அமைக்க ஏற்கனவே பணிஆணை வழங்கப்பட்டுள்ளது,
அதேபோல ஆலத்தூர் ஒன்றியத்தில் 2 புதிய குளங்கள் அமைக்க பணிஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். புதிய குளங்களை அமைப்பதோடு இருந்துவிடாமல், தற்போது உள்ள குளங்களையும் சீரமைக்க வேண்டும். குளங்கள், ஏரிகளுக்கு வரும் வரத்துவாய்க்கால்கள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். ஒரு வார காலத்திற்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு அதற்கான அறிக்கையினை சம்மந்தப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும். அதேபோல, கிராமப்பகுதிகளில் குடிநீர் சீராக வழங்கப்படுகின்றதா, குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பழுதடைந்த நிலையில் குடிநீர் குழாய்கள் இருந்தால் அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை அந்தந்த பகுதிகளின் ஓவர்சியர்கள்,
உதவிப்பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்தப்பணிகளை முறையாக மேற்கொண்டு உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் நிலை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேப்பூர் செல்வமணி , ஆலத்தூர் சேகர், வட்டாட்சியர்கள் குன்னம் கோவிந்தம்மாள் , ஆலத்தூர் சத்தியமூர்த்தி , வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சீயர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.