தஞ்சாவூரில் உலக மனநலிவு சிறப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நலத்துறை தலைவர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி உலக மனநலிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடால் ஏற்படும் பாதிப்பு. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மாறுபட்ட முக அமைப்பு, குறைவான உயரம், இடுங்கிய கண்கள் போன்றவை இருக்கும்.

புரிந்து கொள்வதில், கற்றுக் கொள்வதில் தாமதம், கண் பார்வை, செவித்திறன் குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள் போன்றவை வரலாம். மேலும், பிறவி இருதயக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த மாறுபாட்டினை குழந்தை பிறந்த உடனே கண்டறிந்து இருதயம், தைராய்டு, கண், காது மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டவுடன் தேவையான ஆரம்ப கட்ட சிகிச்சையை முறையாக அளிக்கப்பட வேண்டும்.

இந்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் உலக மன நலிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனநலிவு பாதிப்பு குழந்தைகளை சிறப்பு கவனம் கொடுத்து மருத்துவர்கள், பெற்றோர்கள் கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதில் குழந்தைகள் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பாரதியார், யசோதை, கிருஷ்ணன், உள்ளிட்ட மாறுவேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு கரவொலி எழுப்பி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, துணைக் கண்காணிப்பாளர் விஜய் சண்முகம், இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் அமுதவடிவு உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story