உலக கடற்பசு தினம் : மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
உலக கடற்பசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலக கடற்பசு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் பங்கேற்க தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, தஞ்சாவூர் வனக்கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வனத்துறையின் தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில், உலகக் கடற்பசு நாள் வரும் மே.28 ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள தஞ்சாவூர் மாவட்ட வன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் வயது வேறுபாடு இல்லை, பள்ளி முதல் கல்லூரி வரையுள்ள அனைத்து நிலை மாணவர்களும் பங்கேற்கலாம். ஓவியம் வரைகின்ற அட்டை மட்டுமே அங்கு வழங்கப்பெறும். இதர உபகரணங்கள் போட்டியாளர்களே தம்முடன் கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு உண்டு. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசும், சிறப்புச் சான்றிதழும் போட்டி நிறைவு பெறும்போதே அங்கேயே வழங்கப்படும். "கடற்பசு - இயற்கை கடலுக்குள் தீட்டிய உயிரோவியம்" என்ற தலைப்பில் ஓவியக் கருப்பொருளை வரைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9655697390 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.