உலக மண் தினம்

நாமகிரிப்பேட்டையில் வேளாண்மை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் உலக மண் தினம் குறித்த கருத்து காட்சி கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் உலக மண் தினம் குறித்த கருத்து காட்சி கூட்டம் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தெரிவித்தாதவது: மண் வளத்தை மேம்படுத்தவும், மண் வளத்தை காத்திடவும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5ம் தேதியினை உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டு சர்வதேச அளவில் மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற்று பரிந்துரைக்கேற்றவாறு உர அளவினை பயன்படுத்தவும், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், அங்கக உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கேற்ப பயன்படுத்தி ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினை கடைபிடிப்பதன் மூலம் சாகுபடி செலவை குறைக்க முடியும். மேலும் மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து களர் உவர் நிலங்களை சீர்திருத்தம் செய்யவும் இயலும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை எளிதாக அறியும் வகையில் “தமிழ் மண்வளம்” என்ற இணையதளம் தொடங்கப்பட்டு அதில் அனைத்து விவசாயிகளின் சர்வே எண் வாரியான மண்ணில் உள்ள சத்துக்களின் விபரம், அடுத்து பயிரிடப்படவுள்ள பயிருக்கான உரப்பரிந்துரை போன்ற விபரங்கள் பதியப்பட்டுள்ளது. அதனை விவசாயி தன் கைபேசி மூலமாகவே உழவன் செயலி மூலம் மண்வள அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணம்பாளையத்தில் நடமாடும் பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களிலிலேயே மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலமாகவும், நேரடியாகவும் மண் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பலாம். நாமக்கல் மாவட்டதில் NADP-RKVY திட்டத்தின் கீழ் இதுவரை 17,278 மண்மாதிரிகள் மற்றும் 2,730 நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே விவசாயிகள் மண்வள அட்டை பெற்று பரிந்துரைக்கேற்ப உரங்கள் பயன்படுத்திடவும், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், பசுந்தாள் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இயற்கை முறைகளை பயன்படுத்தி மண்வளம் காத்திடவும், அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம் அமைக்க மகிழம் விவசாய குழுவிற்கு ரூ1.00 இலட்சம் மதிப்பிலான நிதி உதவி, 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4,000/- மதிப்பீட்டில் வேளாண் இடுப்பு பொருட்கள், 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ஆகியவற்றை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story