உலக மண் தின விழா 

பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான உலக மண் தின விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான உலக மண் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், வேளாண்மையில் உரிய மகசூல் கிடைத்திட மண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் மண்ணில் உள்ள களர், உவர் அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திடலாம். மேலும், தேவைக்கேற்ப உரமிட்டு உரச்செலவை குறைப்பதற்கும், உரம் பயிருக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்திடவும், அதிக மகசூல் பெற்றிடவும், அங்கக சத்துக்களின் அளவினை அறிந்து, நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரினை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற்றிடவும் மண் பரிசோதனை அவசியம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, விழாவிற்கு தலைமை வகித்த வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ச.ஈஸ்வர் பேசுகையில், "மண்ணுக்கும் உண்டு, மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில், வேளாண்மையில் அதிக மகசூல் பெறுவதற்காக, பல காரணிகளில் மண் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். பயிர் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளில், மண்ணில் உள்ள சத்துக்களின் தன்மை, அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு, பயிர்களுக்கு கிடைக்கும் சத்துக்கள் அளவு, மண்ணில் களர், உவர் மற்றும் அமிலத்தன்மை முதலியவை முக்கிய பங்களிக்கின்றன. மண்ணில் உள்ள பேரூட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அளவுகளை அறிவதற்கும் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மங்கனீசு சத்து அளவை அறிவதற்கும் மண் பரிசோதனை இன்றியமையாதது" என்றார்.

ஆடுதுறை மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் மு.ஹரிணி, மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி எடுத்துக் கூறி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். விதை ஆய்வாளர் நவீன் சேவியர் பேசுகையில்,"மண்வளத்தினை பாதுகாக்க தொழு உரம், மண்புழு உரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, கொளுஞ்சி ஆகியவற்றை மண்ணில் அதிக அளவு சேர்ப்பதினால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு இயற்கை வளமும் பாதுகாக்கப்படுகிறது" என்றார். இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சார்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் பட்டுக்கோட்டை வேளாண் அலுவலர் சன்மதி நன்றி கூறினார்.

Tags

Next Story