ஓசூர் அருகே கும்பாபிஷேக விழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு
ஓசூர் அருகே சூளகிரி வட்டாரம் கோனேரி பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டுகுறுக்கி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேசன்ன சுவாமி மற்றும் ஸ்ரீ தோரள்ளி சுவாமி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் பூரண அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இன்று காலையிலிருந்து கங்கா பூஜை, ருத்விக்க வரனா கலச ஆராதனை, தீப ஆராதனை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
நாளை கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று தலைமேல் தேங்காய்களை உடைக்கும் வினோத நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி பாரம்பரிய முறைப்படி கிராம தெய்வங்களான தொட்டையா சுவாமி, சித்தையா சுவாமி, பத்திராய சுவாமி, தேசன்ன சுவாமி, தோரள்ளி சுவாமி, கூலி சந்திர சுவாமி, சாக்கியம்மா, சாதேவம்மா, வன்னேரம்மா ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிகளின் முன்னால் பக்தர்கள் தங்களது தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அடுத்தடுத்து தலை மேல் தேங்காய்களை உடைத்து கொண்டனர். இந்த திருவிழாவில் காமன்தொட்டி, கோனரிப்பள்ளி, பிள்ளை கொத்தூர், கோட்ராலப்பள்ளி, குருபசப்படி, பங்காநத்தம், சாமல் பள்ளம், இருதாளம், தாசனபுரம், கலகோப சந்திரம், உனிசெட்டி, பொம்ம தாத்தனூர், பூனப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.