உயிரிழந்த கோவில் காளைக்கு சிலை வைத்து வழிபாடு

உயிரிழந்த கோவில் காளைக்கு சிலை வைத்து வழிபாடு

காளை வழிபாடு 

திருக்கோஷ்டியூரில் உயிரிழந்த கோவில் காளைக்கு சிலை வைத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு ஊத்துப்பட்டியில் இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் சிலை அமைத்து திறப்பு விழா நடத்தினர். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு 1983 ல் நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட கன்று குட்டியை வளர்க்க ஊத்துப்பட்டி கிராமத்திடம் கோயில் நிர்வாகம் பரிந்துரைத்தது.

கிராமத்தினரும் கன்றுக்கு 'மொட்டு வால்' என்று பெயரிட்டு மஞ்சுவிரட்டு காளையாக வளர்த்தனர். இப்பகுதியில் நடக்கும் மஞ்சுவிரட்டுக்களில் விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தது. 2010 ல் வயது முதிர்வினால் காளை இறந்தது. இருப்பினும் அதன் சாகசங்கள் கிராமத்தினரின் நினைவுகளை விட்டு அகலவில்லை. காளையை நினைவு கூற கிராமத்தினர் ஊர் மந்தையில் சிலை வைக்க முடிவு செய்தனர்.

14 ஆண்டுகளுக்கு பின் சிலை நிறுவ அதற்கு கோபுரம் கட்டியுள்ளனர். பின்னர் திறப்பு விழாவை முன்னிட்டு கரந்தமலை அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து சவுமியநாராயண பெருமாள் கோயிலில் அர்ச்சனை செய்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று கிராம தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து சிலைக்கு அபிேஷகம்,ஆராதனை நடந்தன. கிராமத்தினர் பரவசத்துடன் மாலை அணிவித்து காளையை வணங்கிச் சென்றனர். தொடர்ந்து அன்னதானம், கலைநிகழ்ச்சி நடந்தன. ஏற்பாட்டினை திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு கிராமத்தினர், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் செய்தனர்.

Tags

Next Story